×

ஒன்றிய அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சாலை மறியல்

*378 பேர் அதிரடி கைது

கடலூர் : ஒன்றிய அரசை கண்டித்து கடலூர் மாவட்டத்தில் அனைத்து தொழிற்சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத, ஜனநாயக விரோத கொள்கைகளை கண்டித்தும், பொதுத்துறை நிறுவனங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பதை கண்டித்தும், மின்சார சட்டத் திருத்த மசோதாவை திரும்பபெற கோரியும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரியும், அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கடலூர் அண்ணா பாலம் அருகே மறியல் போராட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்ட செயலாளர் பழனிவேல் தலைமை தாங்கினார்.

மாவட்ட துணைத் தலைவர் ஆளவந்தார், கோட்ட செயலாளர் குரு சந்திரன், கடலூர் மாநகர பொறுப்பாளர் நாகராஜ், ஐஎன்டியுசி மாவட்ட கவுன்சில் துணைத் தலைவர் கருணாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொமுச மண்டல தலைவர் பழனிவேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மாதவன்,சிஐடியு மாநில செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த மறியல் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இந்த மறியல் போராட்டத்தின் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் பின்னர் போலீசார் மறியலில் ஈடுபட்ட 125க்கும் மேற்பட்டோரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

பண்ருட்டி: பண்ருட்டியில் மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து சிஐடியூ, ஏஐடியூ, எல்பிஎப் உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பண்ருட்டி -கடலூர் சாலையில் உள்ள பயணியர் விடுதியில் இருந்து விவசாய சங்க மாவட்ட தலைவர் சிவக்குமார் தலைமையில் ஊர்வலமாக சென்று நான்குமுனை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பண்ருட்டி இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்ட 100பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்து பின்னர் அனுப்பினர்.

நெய்வேலி: நெய்வேலியில் ஒன்றிய அரசின் ஜனநாயக கொள்கையை கண்டித்து என்எல்சி தொமுச, சிஐடியூ உள்ளிட்ட அனைத்து கட்சி சார்பில் மறியல் நடைபெற்றது. சிஐடியூ நிர்வாகி ஜெயராமன் தலைமை தாங்கினார். என்எல்சி தொமுச தலைவர் திருமாவளவன், பொருளாளர் ஐய்யப்பன் முன்னிலை வகித்தனர். தொமுச பொதுச்செயலாளர் பாரி பேசினார். பேரணியாக என்எல்சி தொழிலாளர்கள் நெய்வேலி மெயின் பஜார் காமராஜர் சிலை சிலையில் இருந்து வட்டம் 19 தபால் நிலையம் வரை செல்ல முயன்றனர்.

அப்போது நெய்வேலி டிஎஸ்பி சபியுல்லா தலைமையிலான போலீசார் தொழிலாளர்களை கைது செய்து என்எல்சி திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அனைவரையும் விடுவித்தனர். இதில் சிஐடியூ நிர்வாகிகள் திருஅரசு, சீனிவாசன், எல்எல்எப் காசிநாதன் திருநாவுக்கரசு, ஐஎன்டியூசி, குள்ளபிள்ளை, குமார், ஏஐடியூசி சவுந்தரராஜன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

சிதம்பரம்: சிதம்பரம் வடக்கு மெயின் ரோடு தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்றபோராட்டத்திற்கு சி.ஐ.டி.யு மாவட்ட இணை செயலாளர் ராஜேஷ் கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் சங்கமேஸ்வரன், நகர மன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு ரமேஷ் பாபு, மாவட்ட குழு வாஞ்சிநாதன், நகர செயலாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் அனைத்து தொழிற்சங்கத்தினர் கஞ்சி தொட்டியில் இருந்து ஊர்வலமாக சென்று தபால் நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிதம்பரம் உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் ரகுபதி தலைமையிலான போலீசார் போராட்டம் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி 73 பேரை கைது செய்து அதே பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர்.இதேபோல் ஏ.ஐ.டி.யு.சி தொழிற்சங்கம் சார்பில் மாவட்டத் தலைவர் அண்ணாமலை தலைமையில், வட்ட செயலாளர் தமிமுன் அன்சாரி, தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் வி.எம்.சேகர் உள்ளிட்டோர் சிதம்பரம் கஞ்சி தொட்டி முனை அருகே சாலையில் படுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிதம்பர நகர போலீசார் ரோட்டில் படுத்து போராட்டம் நடத்தியவர்களை கைது செய்து அதே பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணத்தில் மத்திய அரசை கண்டித்து நடைபெற்ற போராட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்கம் சுப்ரமணியன் தலைமையில் மாவட்ட செயலாளர் பிச்சமுத்து, மாவட்ட குழு விநாயகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பழைய காவல்நிலையம் அருகே ஒன்றிய அரசை கண்டித்து சாலை மறியல் செய்த 30 பேரை காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

விருத்தாசலம்: தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, ஹெச்எம்எஸ் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் விருத்தாசலம் பாலக்கரையில் நடந்த போராட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். கோட்ட செயலாளர் ஆறுமுகம், நகர் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர். பின்பு மாலை 6 மணி அளவில் அனைவரையும் விடுவித்தனர்.
வடலூர்: வடலூரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் முன்பு தொமுச மாவட்ட பொருளாளர் வேல்முருகன் தலைமையில் போராட்டம் நடந்தது.

இதில் தொமுச மாவட்ட செயலாளர் பொன்முடி, இணை செயலாளர் சிவக்குமார், திட்ட இணை செயலாளர் கண்ணன், சிஐடியு மாவட்ட இணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, சிஐடியு மாவட்ட துணை தலைவர் சீனிவாசன், கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் தண்டபாணி, வடலூர் நகர அமைப்பாளர் இளங்கோவன், மாவட்ட குழு உறுப்பினர்கள் சிவகாமி, மீனாட்சிநாதன், மணி, அசோக் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

The post ஒன்றிய அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : union government ,Cuddalore ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் சந்தையில் வெங்காய...